“சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமாகும் எனக் கூறிய மார்க்கம் இஸ்லாமாகும்.
இதே வேளை, சிரிப்புத்தான் வாழ்க்கை எனும் அளவுக்கு ஒருவனது வாழ்வு அமைந்து விடக் கூடாது. எம்மைப் பார்த்துப் பிறர் சிரிக்கும் நிலைக்கும் எமது வாழ்வு இறங்கி விடவும் கூடாது. சிரிப்பு பிறர் மத்தியில் எமக்கிருக்கும் ஆளுமையைக் குறைத்து விடவும் கூடாது. இதுவும் கவனிக்கத் தக்கதாகும்.
பொதுவாக ஆன்மீகவாதிகள் என அறியப்பட்டவர்கள் பிறர் மத்தியில் அதிகம் சிரிக்க மாட்டார்கள். அது தமது இமேஜைப் பாதிக்கும் எனப் பயப்படுவர். மார்க்க ஈடுபாடுள்ள பலரும் சிரிக்காமலும், அதிகம் கதைக்காமலும் இருப்பதுதான் ஆன்மீகத்துக்கு அழகு என்று எண்ணுகின்றனர். எனவே, இவர்கள் பிறருடன் அதிகம் கதைப்பதில்லை; கலகலப்பாக இருப்பதில்லை. சிரித்தாலும் பதிலுக்குச் சிரிக்கக் கூடப் பஞ்சப்படுவார்கள்.
இருப்பினும், மிகப் பெரிய ஆன்மீகவாதியான நபி(ஸல்) அவர்கள் நண்பர்களுடன் சரி-சமமாகவும், சகஜமாகவும் பழகியுள்ளார்கள். எல்லாப் பணிகளிலும் தோழமையுணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளார்கள். எப்போதும் அவர்களது பொன் முகத்தில் புன்னகை தவழ்ந்துகொண்டேயிருக்கும். அதிகமான சந்தர்ப்பங்களில் வாய் விட்டுச் சிரிக்க மாட்டார்கள். வாய் விட்டுச் சிரித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.
சிரிப்பு – அந்தச் சிரிப்பைச்
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு!
என்றொரு சிரிப்புப் பற்றிய பழைய பாடலை அதிகமானவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எந்தச் சிரிப்பைச் சீர்தூக்கிப் பார்க்காவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது சிரிப்பு அவசியம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகும். நபிகளாரின் சிறிப்புப் பற்றிய ஆய்வின் மூலம் இஸ்லாமிய சட்டங்களை அறியலாம். இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையை அறியலாம். நபி(ஸல்) அவர்களது தூய ஆன்மீக வழிகாட்டலை அறியலாம். அவர்களது அற்புதமான பண்பாட்டை அறியலாம். குணத்தின் குன்றாகவும், பண்பாட்டின் சிகரமாகவும் அவர்கள் மிளிரும் அற்புதத் தன்மையை அறியலாம்.
இந்த வகையில் நபி(ஸல்) அவர்கள் சிரித்த சில சம்பவங்களையும் அவற்றின் மூலம் நாம் பெரும் சட்டதிட்டங்கள், இஸ்லாமிய வழிகாட்டல்கள் குறித்தும் இந்தத் தொடரில் விபரிக்கலாம் என எண்ணுகின்றேன். நிச்சயமாக இது சுவையான, சுவாரஷ்யமான அனுபவமாக அமையும் என எண்ணுகின்றேன்.
தவறைச் செய்து விட்டு தர்மம் பெற்றுச் சென்றவர்:
“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் “விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை!” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தியிருக்கிறதா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த “அறக்” எனும் அளவை கொண்டுவரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். “நான்தான்!” என்று அவர் கூறினார். “இதைப் பெற்று தர்மம் செய்வீராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அம்மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா(நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். பிறகு “இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள். (புகாரி 1936)
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த நபிமொழி இஸ்லாமியச் சட்டமொன்றைத் தெளிவுபடுத்துகின்றது. நோன்பு என்பது அதிகாலை ஸுபஹின் ஆரம்ப நேரத்திலிருந்து மாலை மஅரிபின் ஆரம்ப நேரம் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவில் ஈடுபடாமலிருக்கும் ஒரு இபாதத்தாகும்.
நோன்பு நோற்ற நிலையில் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டால் அவர்;
-1- ஒரு அடிமையை உரிமை விட வேண்டும்.
-2- அதற்கு முடியாவிட்டால் 60 நோன்புகள் தொடராக நோற்க வேண்டும்.
-3- அதற்கும் முடியாவிட்டால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை இச்சம்பவத்தின் மூலம் அறிகின்றோம்.
இந்த அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் நோன்புடன் உடலுறவில் ஈடுபட்டவரிடம் பேசுகின்றார்கள்.
நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர் “நான் அழிந்து விட்டேன்!” என்று கூறிய போதிலும், நபி(ஸல்) அவர்கள் நிதானமாக “என்ன நடந்தது?” என்று கேட்கின்றார்கள். பதட்டத்துடன் வந்தவரது பதட்டத்தைப் போக்குகின்றார்கள். இந்த உரையாடலைத் தொடர்ந்து அவதானித்தால் நபி(ஸல்) அவர்களது நிதானமான போக்கையும், அன்பான அரவனைப்பையும் உணர முடியும்.
பொதுவாக, ஏதாவது “தவறு செய்து விட்டேன்; அதற்குப் பரிகாரமென்ன?” எனக் கேட்டு ஓர் ஆன்மீகவாதியை அணுகிக் கேட்டால் இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திச் சாமிகள் அறுக்க முடிந்த வரை அறுத்து விட்டுத்தான் விடுவார்கள்.
குற்றங்களுக்கு இஸ்லாம் பரிகாரம் காணும் போது அந்தப் பரிகாரம் சமூகத்திற்குப் பயனுள்ளதாகவும் குற்றத்தில் ஈடுபட்டவருக்குப் பக்குவத்தை அளிப்பதாகவும் இருக்கும் வண்ணம் கவனம் செலுத்துகின்றது.
இந்த அடிப்படையில் “ஒரு அடிமையை விடுதலை செய்ய முடியுமா?” எனக் கேட்கின்றார்கள். அன்று மனிதர்கள் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு மிருகங்கள் போன்று சந்தைகளில் விற்கப்பட்டனர். அவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். பல குற்றச் செயல்களுக்கு இஸ்லாம் பரிகாரம் கூறும் போது அடிமை விடுதலையை வலியுறுத்தியது. அடிமையை வாங்கி, அவனை விடுதலை செய்வது சிறந்த நன்மையாக இஸ்லாத்தில் போதிக்கப்பட்டது.
இவர், அதற்கு “முடியாது!” என்றதும் “60 நோன்புகள் தொடராக நோற்க முடியுமா?” எனக் கேட்கின்றார்கள். இது குற்றம் செய்தவரை ஆன்மீக ரீதியில் பக்குவப்படுத்தும் பயிற்சியாகும். பல குற்றச் செயல்களுக்கு இதனை இஸ்லாம் பரிகாரமாக்கியுள்ளது.
ஏற்கனவே 30 நோன்புக்குள் குறித்த குற்றத்தைச் செய்து விட்டு வந்தவர் இவர். 60 நோன்புகள், அதுவும் “தொடராக நோற்க வேண்டும்!” என்று கூறிய போது, “அதற்கு நான் சக்தி பெற்றவனில்லை!” என்று கூறுகின்றார்.
“அதற்கு முடியாதென்றால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா?” என நபி(ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். தற்கால ஆன்மீகவாதிகள், தமது ஆசிரமத்திற்கு “அதை-இதைச் செய்! பாவம் தீர்ந்து விடும்! தீட்டுக் கழிந்து விடும்!” என்று கூறியே கோடி-கோடியாகச் சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். இஸ்லாம், ஒருவன் குற்றம் செய்து விட்டால் அந்தக் குற்றங்கூடச் சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் எனப் பார்க்கின்றது. எனவே, 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமெனச் சட்டம் கூறுகின்றது. பொதுவாக ஏழைகளுக்கு உணவளிப்பதை இஸ்லாம் சிறப்பித்துள்ளது. பல குற்றச் செயல்களுக்குப் பரிகாரம் கூறும் போது 60, 10 ஏழைகளுக்கு உணவளிப்பதைப் பரிகாரமாக்கியுள்ளது. பொதுவாக விருந்துகள் என்று வந்து விட்டால் ஏழைகள் விடுபடுகின்றனர். செல்வந்தர்கள்தான் அழைக்கப்படுகின்றனர். இத்தகைய விருந்து முறையை இஸ்லாம் கண்டிக்கின்றது. ஏழைகள் விடுபட்டுச் செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் விருந்துதான் விருந்துகளிலேயே மோசமான விருந்தென்பது இஸ்லாத்தின் பார்வையாகும். இஸ்லாம் பரிகாரமாகக் கூறிய விருந்து என்பது செல்வந்தர் விடப்பட்டு, ஏழைகள் மட்டுமே கவனத்திற்கொள்ளப்படக் கூடிய விருந்தாகும்.
குறித்த இந்த 3 பரிகாரங்களையும் செய்ய முடியாத பரம ஏழையாகவும், பலவீனமானவராகவும் இவர் இருக்கின்றார். இருப்பினும் இவரது உள்ளம் தூய்மையான உள்ளமாகவும் இருக்கின்றது.
இவர் தூய உள்ளத்தையுடையவர் என்பது ஹதீஸில் நேரிடையாகக் கூறப்படாவிட்டாலும் நபி(ஸல்) அவர்களது பார்வை விசாலமானது. நுணுக்கமானது. இவரது பரிசுத்தத் தன்மையை நபி(ஸல்) அவர்கள் தனது விரிந்த பார்வையூடாகப் புரிந்துகொள்கின்றார்கள்.
இவர் தனது மனைவியுடன் உறவு கொண்டது இவருக்கும், இவரது மனைவிக்கும், அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த விடயமாகும். இதை இவர் மறைத்து விட்டு இவர் பாட்டில் இருந்திருக்கலாம். இருப்பினும் தற்செயலாகத் தவறு நடந்து விட்டது; நடந்த தவறுக்குப் பரிகாரம் காண வேண்டும் என இவரது உள்ளம் ஏங்குகின்றது. எனவேதான், வெட்கத்தையும் பொருட்படுத்தாமல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தான் அழிந்து விட்டதாக அறிவிக்கின்றார். நபி(ஸல்) அவர்களைத் தனிமையில் சந்தித்துக் கூட இதை அவர் கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் இருக்கின்றார்கள். இவரது உள்ளம் இவரையுறுத்தியதால் மக்கள் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சபையில் வந்து நடந்ததைக் கூறிப் பரிகாரம் கேட்கின்றார் என்றால், இவர் பரிசுத்தமானவர் தானே! திட்டமிட்டுக் குற்றஞ்செய்யும் குணம் இவரிடமிருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டாரல்லவா?
ஒரு மனிதன், தான் செய்த தவறுக்காக வருந்துகின்றான் என்றால், அதற்கு உரிய முறையில் பரிகாரம் காண முற்படுகின்றான் என்றால், அதுவே பாவ மீட்சிக்கான வழியாக அமைந்து விடுகின்றது.
‘எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நிர்ப்பந்திப்பதில்லை’ என்பது இஸ்லாத்தின் பொதுவான கோட்பாடாகும். குர்ஆனின் பல வசனங்கள் இந்தப் பொது விதியைப் பற்றிப் பேசுகின்றன. இந்தப் பொது விதி இங்கே கடைபிடிக்கப்படுகின்றது.
‘இவருக்கு எந்த வசதியும் இல்லை’ என்று கூறிய பின்னர் நபி(ஸல்) அவர்களே ஈத்தம் பழங்களைக் கொடுத்து தர்மம் செய்யச் சொல்கின்றார்கள். தர்மம் எமது குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையும்.
செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டு, தர்மம் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்காக இந்தக் கருத்தை இஸ்லாம் கூறவில்லை. தவறுதலாகக் குற்றம் நிகழ்ந்து விட்டால் அல்லது கடந்த காலக் குற்றங்களுக்குப் பரிகாரம் பெறுவதற்கு தர்மம் சிறந்த வழி என்பதையும் இந்த ஹதீஸ் கூறுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அந்த நபித் தோழரின் வறுமை நிலை புலப்படுகின்றது. “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழைக்கு, என்னை விடத் தேவையுடையவருக்கு தர்மம் செய்யச் சொல்கின்றீர்களா? மதீனாவில் இந்த இரு மலைகளுக்கு மத்தியில் என் குடும்பத்தை விட ஏழையோ, தேவையுடையவரோ இல்லை!” என்று கூறுகின்றார்.
அவர் பாவித்த வார்த்தையை இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால், என் மனைவியைப் போன்ற தேவையுடையவர் வேறு எவரும் இருக்க முடியாது என்ற கருத்தில் கூறுகின்றார். இவரது இந்த வார்த்தையைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் சிரிக்கின்றார்கள்; தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் வரை சிரிக்கின்றார்கள்.
பொதுவாக, ஒருவர் தவறு செய்தால் அவர் மீது கோபங்கொள்வதுதான் மனித இயல்பாகும். அதிலும் ஆன்மீகவாதிகள் தாம் பெரிய பக்குவப்பட்டவர்கள் என்பதைக் காட்டக் கடுமை காட்டுவர். குறிப்பாகத் தான் போதித்த போதனைக்கு ஒருவர் தவறு செய்து விட்டார் எனும் போது வெறுப்பு இன்னும் அதிகமாகும். அதனால் ஆரம்பம் முதல் இறுதி வரை நபி(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம் கோபத்தையோ, வெறுப்பையோ காட்டவில்லை. கரடு-முரடான வார்த்தைகளையோ, வசைபாடலையோ பயன்படுத்தவில்லை. கனிவான, அன்பான, அரவணைக்கும் தொணியிலேயே அவர்களது அணுகுமுறை அமைந்திருந்தது.
அவர் குற்றத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே பரிகாரத்தைக் கடைபிடிக்க முடியாத தனது கஷ்ட நிலையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியது போன்றே, தனது தவறையும் வெட்கமில்லாமல் வெளிப்படையாகவே கூறி விடுகின்றார். பரிகாரமாக அமையும் வண்ணம் நபி(ஸல்) அவர்கள் அளித்த பேரீத்தம் பழங்களையும் தனக்குத் தர வேண்டும் என்பதை இந்த வார்த்தைகள் மூலம் உணர்த்துகின்றார். அவர் ஒரு திறந்த புத்தகமாகத் திகழ்கின்றார்.
நபி(ஸல்) அவர்கள், அவரைப் பார்த்து “இதை உன் குடும்பத்திற்கே உண்ணக் கொடு!” என்கின்றார்கள். குற்றம் செய்தார்; அதற்குப் பரிகாரம் காண வந்தார். பரிகாரங்கள் எதையும் செய்ய முடியாத தனது பரிதாப நிலையைப் பகிரங்கமாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் கொடுத்த தர்மத்தைக் கூடப் பிறருக்குக் கொடுப்பதை விட, “அதற்குத் தானே தகுதியானவன்!” எனக் கூறினார். இதன் மூலம் குற்றஞ்செய்து விட்டு, தர்மத்தையும் பெற்றுக்கொண்டு வீடு சென்றார்.
இஸ்லாம் கூறும் பொது விதிகளில், கஷ்டம் இலகுவைக் கொண்டு வரும் என்பது ஒன்றாகும். இவரது கஷ்டம் இவருக்கு இலகுவை மட்டுமல்ல! பரிசையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
நபி(ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்த மற்றுமொரு சம்பவத்துடன் இன்ஷா அல்லாஹ் உங்களை மீண்டும் சந்திக்க அல்லாஹ் அருள் புரிவானாக!