காஃபிர்களுடன் நடந்து கொள்ளும் முறை

இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர ஏனைய மதங்களும் இஸங்களும் அசத்தியமானவை. அவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் காஃபிர்களாவர். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம். அதை பின்பற்றக்கூடியவர்கள் முஃமின்கள், முஸ்லிம்களாவர்.

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன்: 3:19)

‘இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால் அவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக இருப்பான். (அல்குர்ஆன்: 3:85)

இதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவருமே காஃபிர்கள் என்று ஒரு முஸ்லிம் கருத வேண்டும். காஃபிருடன் பின்வரும் ஒழுக்கங்களைப் பேணி நடக்க வேண்டும்.
1. அவனுடைய நிராகரிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதைப் பொருந்திக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இறைநிராகரிப்பை பொருந்திக் கொள்வதும் இறைநிராகரிப்பாகும்.

2. அவனை வெறுக்க வேண்டும். அல்லாஹ் அவனை வெறுப்பதனால். ஏனெனில் விருப்பும் வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும். தன்னை நிராகரிக்கின்றான் என்பதற்காக அல்லாஹ் அவனை வெறுக்கும் போதெல்லாம் அல்லாஹ் வெறுக்கிறான் என்பதற்காக ஒரு முஸ்லிமும் அவனை வெறுக்க வேண்டும்.

3. அவனை நேசிப்பதும் அவனிடம் நட்பு கொள்வதும் கூடாது. எனெனில் அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்கள் (தங்களைப்போன்ற) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து இறைநிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய் ஆதரவாளர்களாய் ஆக்கிக் கொள்ள வேண்டாம். (அல்குர்ஆன்: 3:28)

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை வைத்திற்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர், அத்தகையோர் அவர்களின் தந்தையராயினும் அல்லது அவர்களின் தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! (அல்குர்ஆன்: 58:22)

4. காஃபிர் முஸ்லிமை எதிர்த்துப் போராடக் கூடியவனாக இல்லையென்றால் முஸ்லிம் அவனிடம் நீதமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதுடன் அவனுக்கு நன்மையே செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ, உங்களை உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதியுடனும் நடப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 60:8)

5. பொதுவாக எல்லோரையும் போலவே அவனிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். உதாரணமாக அவனுக்குத் பசித்தால் உணவளிக்க வேண்டும். அவனுக்குத் தாகம் ஏற்பட்டால் தண்ணீர் கொடுக்க வேண்டும் அவன் நோயுற்றால் மருத்துவம் செய்ய வேண்டும். அல்லது அழிவிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டும். மேலும் அவனுக்கு ஏற்படும் துன்பம், தொல்லைகளை நீக்க வேண்டும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியிலுள்ளவர்களுக்கு நீ இரக்கம் காட்டு. வானத்திலிள்ளவர்கள் உனக்கு இரக்கம் காட்டுவார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: தப்ரானி, ஹாகிம்

6. அவன் முஸ்லிமுடன் போரிடக்கூடியவனாக இல்லையென்றால் அவனுடைய பொருளுக்கும் மானமரியாதைக்கும் பங்கம் விளைவிக்கக் கூடாது.அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். என் அடியார்களே! அநியாயம் செய்வதை எனக்கு நானே தடை செய்துள்ளேன். உங்களுக்கு இடையேயும் இதை தடை செய்திருக்கிறேன் எனவே உங்களில் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய வேண்டாம். அறிவிப்பவர்: அபூதார்(ரலி), நூல்: முஸ்லிம்

7. அவனுக்கு அன்பளிப்பு வழங்குவதும் அவன் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதும், அவன் யூத, கிறிஸ்தவனாக இருந்தால் அவனது உணவை உண்பதும் ஆகுமானதே.

‘வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உணவு உங்களுக்கு ஆகுமாக்கட்டிருக்கின்றது’ என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன்: 5:5)

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனுடைய விருந்திற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்று அவர்கள் தந்த உணவை உண்டிருக்கிறார்கள்.

8. முஃமினான பெண்ணை அவனுக்கு மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. ஆனால் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பெண்களை மணந்து கொள்வது கூடும்.

அல்லாஹ் கூறுகிறான்: இறைவனுக்கு இணைவைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் கொள்ளும்வரை ஒரு போதும் நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன்: 2:221)

‘முஃமினான நல்லொழுக்கமுடைய பெண்களையும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்களையும் விலைப் பெண்டிராகவோ ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து மணமுடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது’. (அல்குர்ஆன்: 5:5)

9. அவன் தும்மி அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால் அவனுக்காக, யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் (அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டி உனது நிலையை சீர்படுத்துவனாக) என்று கூற வேண்டும்.

ஏனென்றால் நபி(ஸல்)அவர்களிடம் யூதர்கள் தும்பும் போது அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவார்கள் – யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என நபி(ஸல்) அவர்கள் தங்களுக்காக கூற வேண்டுமென எதிர் பார்த்தவாறு. ஆனால் நபி(ஸல்) அவர்களோ யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹீ பாலகும் என்றே கூறுவார்கள்.

10. அவனுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லக் கூடாது. அவன் ஸலாம் கூறினால் பதில் கூறலாம்.

அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு (ஸலாம்) என்னும் வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள். (அல்குர்ஆன்: 4:86)

வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் வ அலைக்கும் என்று கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி) -புகாரி,முஸ்லிம்.

(குறிப்பு:- வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள் மீது நாசம் உண்டாகட்டும்) என்று கூறுவதுண்டு. அப்படிக் கூறும் போது மட்டும் வ அலைக்கும் (உங்கள் மீதும் நாசம் உண்டாகட்டும்) என்று பதில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டு)

11. அவனைக் கடந்து செல்லும்போது பாதையின் ஒரத்திற்கு அவனைத் தள்ள வேண்டும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூத, கிறிஸ்தவர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள். அவர்களை நீங்கள் ஒரு பாதையில் சந்தித்தால் பாதையின் ஒரத்திற்கு அவர்களைத் தள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

12. (கலாச்சாரத்திலும் பழக்கவழக்கங்களிலும்) அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது.

நபி(ஸல்) கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல்: அபூதாவூது.