லைலத்துல் கத்ர் இரவு

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். பல வருடங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள் ஒரு இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

சிறப்புகள்:
'இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க இரவில் நாம் இறக்கினோம். மகத்துவமிக்க இரவைப் பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும்'. (அல்குர்ஆன் 97:1-3)
சிறப்புகள்: 1. அல்குர்ஆன் இறக்கப்பட்ட இரவு. 2. ரமளான் மாதத்தில் ஒரு இரவு 3. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு.

அது எந்த இரவு?:
'..ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவர்களுடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூற்கள்: முஸ்லிம், அஹ்மது)

மேற்கண்ட ஹதீஸ்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

'லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இந்த ஹதீஸில் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் அது இருக்கிறது என்றும் மேலும் சில ஹதீஸ்களில் குறிப்பிட்ட நாளின் இரவில் அது இருக்கிறது என்றும் வந்துள்ளது. இருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் மறந்து விட்டதால் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் தேடுவதே சிறந்ததாகும்.

லைலத்துல் கத்ரை தேடுவது:

'நபி (ஸல்) அவர்கள் மற்ற நாட்களில் முயற்சிக்காத அளவு கடைசிப் பத்து நாட்கள் முயற்சிப்பார்கள்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: இப்னுமாஜா, அஹ்மது, திர்மிதி 726)

லைலத்துல் கத்ர் இரவில் வணக்க வழிபாடு:

'ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை (வணக்கத்தில் ஈடுபடுவதற்காக) விழித்திருக்கச் செய்வார்கள்' இதை அலி (ரலி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: திர்மிதி 725, அஹ்மது)

(இஃதிகாப்) பள்ளியில் தங்குதல்:

'நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்து வந்தார்கள்'. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: திர்மிதி 720, அஹ்மது)

இரவு வணக்கமும் பாவமன்னிப்பும்:

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி 619, அபூதாவூது, முஅத்தா)

லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'


லைலத்துல் கத்ர் இரவின் முழுமையான பயனை அடைந்து கொள்ள ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் முயற்சிப்போமாக! அதற்கு அல்லாஹ் நமக்கு உதவிடுவானாக!