நூஹ் நபியின் கப்பல்





நூஹ் நபியின் கப்பல் நூஹ் அலைஹி வஸ்ஸலாம் இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்க...ண்டவாறு கூறப்பட்டுள்ளது மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர். “நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.” அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார். “அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்). இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார். பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார். அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான். ” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’ என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ‘அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்’ எனவும் கூறப்பட்டது “. திருக்குர்ஆன் 11:44. ” அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை “. திருக்குர்ஆன் 26:121. ” அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம் “. திருக்குர்ஆன் 29:15. ” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப் பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “. திருக்குர்ஆன் 54:13-15. இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப்பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் தேதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப்பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது. இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது. மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது. ‘அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம்; சிந்திப்பவர் உண்டா?’ என்று கூறி, சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது. திருக்குர்ஆன், “இறைவனின் வேதம்” என்பதற்கு இது சான்றாகவுள்ளது.