ஸமூது கூட்டத்தினர்




ஸமூது (கூட்டத்தினர்) வாழ்ந்த குகை வீடுகள் சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஸாலிஹ் நபி. சவுதி அரேபியாவில் உள்ள மதாயன ஷாலிஹ் என்ற இடத்தில் பெரும்பாறைகளை குடைந்து அவர்கள் வாழ்ந்த குகை வீடுகள் இப்போதும் உள்ளன. மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மதாயன ஷாலிஹ் உள்ளது. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.” அல்குர்அன் 11:61 (இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள். அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். அல்குர்ஆன் 15:80-82 பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்) ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) அல்குர்ஆன் 89:9 அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்). ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார். நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன். அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர். அல்குர்ஆன் 11:64-67