அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
“மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13)
இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் வெளிப்படையாக பேசுவதையும், நம் இதயங்களில் மறைத்து வைத்துள்ள இரகசியங்களையும் அறிவான். இந்தப் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மடடுமே உரியது.
எவரேனும் ஒருவர் மற்றவரின் இதயத்தில் உள்ள இரகசியங்களை அல்லாஹ்வைத்தவிர இறைநேசரோ, அவுலியாவோ, மற்றவர்களோ அறிந்துக் கொள்ள முடியும் என்று நம்பினால் அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் ஆற்றலாகிய இதயங்களில் உள்ள இரகசியத்தை அறியும் தன்மை அல்லாஹ் அல்லாதவருக்கு இருப்பதாக கருதுவதாகும். இதற்கு ஒரு உதாரணம் காண்போம்: -
ஒருவர் மலேசியாவில் இருந்துக் கொண்டு தம் மனதிற்குள், தம்முடைய ஒரு தேவையை நாகூரில் அடக்கமாகியிருக்கும் சாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தந்தால் அந்த அவுலியாவுக்கு காணிக்கை செலுத்துவேன் என்று நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம். இங்கே இவர் இரண்டு விதமான ஷிர்க்கைச் (இணை வைத்தலைச்) செய்தவராகிறார்.
ஒன்று அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேணடிய நேர்ச்சை என்ற வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர மற்றவரிடத்தில் செய்வது
இரண்டாவது மலேசியாவில் இருக்கும் அவருடைய மனதில் உள்ள இரகசியங்களை அல்லது தேவைகளை அல்லாஹ்வுக்கு தெரிவதோடு மட்டுமல்லாமல் நாகூரில் இருக்கும் சாகுல் ஹமீது அவுலியாவுக்கும் தெரிகிறது என்று நம்புவது.
மேற்கண்ட இரண்டு நம்பிக்கைகளுமே இணைவைத்தல் என்னும் ஷிர்க்கின் வகையைச் சேர்ந்ததாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)
மேலும் நம் இதயங்களில் உள்ள இரகசியங்களை, (தேவைகளை, எணணங்களை) அறிபவன் அல்லாஹ் மட்டுமே என்று திருக்குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான். பார்க்கவும் – 11:5, 11:31, 29:10, 48:18, 67:13, 28:69, 28:69, 2:284, 3:29, 14:38
இணைவைத்தல் என்னும் கொடிய பாவத்தைத் தவிர மற்ற பாவங்களை தான் நாடியவருக்கு மன்னிப்பேன் என்று அல்லாஹ் கூறியிருப்பதால் நாம் மிகுந்ந எச்சரிக்கையோடு இணைலவத்தலின் சாயல் கூட நம் வாழ்வில் ஏற்படாதவாறு நாம் பார்த்துக்கொள்ள வெண்டும்.
எனவே நம் இதயங்களின் இரகசியங்களை அறியக்கூடியவனான அல்லாஹ்விடமே நம் தேவைகளைக் கூறி பிராத்திக்க அல்லாஹ் கிருபை செய்வானாகவும்.