வாழ்க்கையின் பொருள் பற்றி சமீபத்தில் நான் படித்த ஒரு கதை இங்கே.
ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்த சில மாணவர்கள், படித்து முடித்து சில
ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கல்லூரியில் சந்திக்கின்றனர். அப்போது,
கல்லூரி வாழ்க்கையைப் போல வெளி உலக வாழ்க்கை சந்தோசமானதாக இல்லை என்றும்
வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது என்றும் அலுத்துக் கொள்கின்றனர்.
அப்போது அங்கு வந்த அவர்களது முன்னாள் பேராசிரியர் அவர்களை தன்
வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைக்கிறார். சுவையில் சிறந்த அவர்
வீட்டு தேநீர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமானது.
அவரது வீட்டில் தேநீர் பல்வேறு விதமான கோப்பைகளில் பரிமாறப் படுகின்றது.
சில கோப்பைகள் சாதாரணமானவை, சில கோப்பைகள் அழகானவை, சில கோப்பைகள் விலை
உயர்ந்தவை, வேறு சிலவோ பிரத்யேகமாக கலை அழகோடு வடிவமைக்கப் பட்டவை.
அந்த மாணவர்கள், அழகற்ற கோப்பைகளை தவிர்த்து விட்டு அழகிய கோப்பைகளிலேயே
தேநீர் அருந்த விரும்புகின்றனர். கலை வடிவம் மிக்க தேநீர் கோப்பைக்காக
அவர்களிடையே சிறிய போட்டி கூட நடக்கிறது.
ஒருவழியாக, தமக்கான கோப்பையை தேர்வு செய்து, மாணவர்கள் அனைவரும் தேநீர்
அருந்தும் போது அங்கு வந்த பேராசிரியர் சிறிய விளக்க உரை
நிகழ்த்துகிறார். அது இங்கே.
"ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். நீங்கள் அனைவரும் அழகில் சிறந்த, விலை
உயர்ந்த கோப்பைகளிலேயே தேநீர் அருந்த விரும்பினீர்கள். ஒவ்வொரு தனி
மனிதனும் தனக்கென சிறந்ததையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இது மிகவும்
இயல்பான விஷயம்தான் என்றாலும் பல பிரச்சினைகளின் மூல காரணம் அதில்தான்
உள்ளது.
நீங்கள் கஷ்டப் பட்டு போராடி தேர்வு செய்த கோப்பைகள், தேநீருக்கு எந்த
ஒரு தனிச் சுவையையும் கூட்ட வில்லை. சொல்லப் போனால், கலைநயம் மிக்க சில
கோப்பைகள், எளிதில் தேநீர் அருந்த, அதன் சுவையை முழுமையாக உணர தடையாகவே
இருந்தன.
உண்மையில், என் வீட்டிற்கு நீங்கள் வந்தது சுவையான தேநீரை அருந்தவே. கலை
நயம் மிகுந்த கோப்பைகளை உபயோகிக்க அல்ல.
ஆனாலும், தேநீர் அருந்த வந்த உங்கள் கவனம், கோப்பைகளைப் பார்த்தவுடன்
திசை மாறி விட்டது. அதிலும், உங்கள் கையில் உள்ள கோப்பை மீது இருந்த
கவனத்தை விட அடுத்தவர் கையில் என்ன கோப்பை உள்ளது என்பதில்தான் அதிக
கவனம் இருந்தது.
நண்பர்களே! இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று
நினைக்கிறேன். வாழ்க்கை என்பது கூட சுவையான தேநீர் போன்றது. இடையில்
வந்து போகும் பதவி, பணம், புகழ் எல்லாமே, அந்த வாழ்க்கையை தாங்கிப்
பிடிக்க உதவும் கோப்பைகள் மட்டுமே.
மேற்சொன்ன பணம் பதவி போன்ற விஷயங்கள் எதுவும் வாழ்க்கை எனும் தேநீரின்
சுவையை மாற்றுவதில்லை. ஆனால் பல சமயங்களில், கோப்பைகளில் அதிக கவனம்
செலுத்தும் நாம் வாழ்க்கையை முழுமையாக சுவைக்க மறந்து விடுகிறோம். பலர்
இது போல காலப் போக்கில் வாழ்க்கை எனும் தேநீரின் உண்மையான சுவை மறந்து
போய் இயந்திரகதியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்! மகிழ்ச்சியாக வாழும்
மனிதர்களுக்கு எல்லாவற்றிலும் உயர்ந்த விஷயங்கள் கிடைப்பதில்லை. அவர்கள்
தங்களுக்கு கிடைத்த தேநீரை முழுமையாக சுவைப்பதிலேயே அதிக கவனம்
செலுத்துகிறார்கள். அதை தாங்கிப் பிடிக்கும் கோப்பைகளில் அல்ல.
அதிகமான பொருட்கள் வைத்திருப்பவன் உண்மையான பணக்காரன் இல்லை. குறைவாக
தேவைகள் உள்ளவனே பெரிய பணக்காரன். "
இவ்வாறு அவர் உரைத்ததும், அந்த மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றி கொஞ்சம்
விளங்கியது போல இருந்தது. இந்த முறை தேநீரின் சுவையை முழுமையாக ருசித்து
பின்னர் கலைந்து போனார்கள்.